A Tamil poem on Yogi Ramsurat Kumar of Tiruvannamalai

Posted: December 1, 2013 in Uncategorized
Tags: , , ,

அருணையில் அருள்வெள்ளம் Image

வாமனன்

பிச்சைக்காரன், என்று தன்னை

பேசிக்கொள்வான்

பிச்சைக்காரன் தான்!

பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் அல்ல

பிச்சை கொடுக்கும் பிச்சைக்காரன்

இச்சை அறுத்த பிச்சைக்காரன்

ஈகை மிகுந்த பிச்சைக்காரன் !

வேலைக்காரன், என்று தன்னை

விவரிப்பான்

வேலைக்காரன்தான்!

வேண்டுவோர் வினைகளைத் தீர்க்கும்

வேலைக்காரன்

வேலை எறிந்த அசுரர்களை

வீழ்த்திய ராமனின் வேலைக்காரன்

வேலையற்ற மனிதர்க்கும்

வேலைகொடுக்கும் வேலைக்காரன் !

ஏதும் அறியாதவன், என்று

இயம்புவான் தன்னை

மோதும் உலகின் சஞ்சலங்கள்

ஏதும் அறியாதவன்தான்

வாதும் சூதும் வஞ்சனையும், ஒரு

போதும் அறியாதவன்தான்

மாதொருபாகன் மலையன்றி

ஏதும் அறியாதவன்தான்!

 

பேச்சாளன் அல்ல, என்று

பேசுவான் தன்னை

பேச்சாளர் பேச நினைக்கும் பெரும் பேச்சாவான்

வீச்சாவான் அவர்தம் வார்த்தைகளில்

விளக்காவான் அவர்தம் சிந்தனையில்

மாச்சரியம் அற்ற மனங்களிலே

மலரும் தெய்வ மணமாவான் !

 

குருவா, நானா என்று

கூறுவான்

குருவாய் வருவோர் தமக்கெல்லாம்

குருவாவான்!

குருவாயூர் தனில் தவழ்கின்ற

குழவியின் மோனமலர்சசிரிப்பில்

அருளாய் அருணையில் இருக்கின்றான்

அமுதாய் உயிரில் இனிக்கின்றான்!

 

சுரதன் என்னும் யாழிசையின்

சுருதியில் லயிக்க வாருங்கள்

பரதனை போன்ற அருளாளன்

பாதம் பற்றிட வாருங்கள்

விரத வாழ்கை வாழ்தவனின்

வேர்களை காண வாருங்கள்

உறுதிப்போருளும் அவன்தானே

உத்தமர்காள் இங்கு வாருங்கள்

(A poem by Vamanan on Yogi Ramsurat Kumar of Tiruvannamalai, whose birth anniversary falls on December 1.)

Advertisements

Comments are closed.