பாரதி என்றொரு பார்ப்பான்

Posted: December 11, 2013 in Uncategorized
Tags: , , , ,

 

பார்ப்பானை  ஐயரில்லை என்று சொன்ன பார்ப்பான் – அவன்

ஆங்கிலேயர் புரட்டுகளை புரட்டிபோட்ட பார்ப்பான்

தன்னை எண்ணி வாழாத தன்னிகரில்லா பார்ப்பான் – அவன்

சாதிமத வேலிகளை தாண்டிசென்ற பார்ப்பான்!

 

வேதம் சொன்ன தத்துவத்தின் வீச்சறிந்த பார்ப்பான்- அவன்

ஊடுருவிப்பார்பான், உள்ளத்தையே பார்ப்பான்

உண்மையொளி தன்னை நெஞ்சில் கொண்டிருந்த பார்ப்பான் – அவன்

ஊருக்காக நாட்டுக்காக வாழ்ந்து சென்ற பார்ப்பான்

  

புதுவை தன்னை புனிதமாக்க அகதியான பார்ப்பான்- அங்கு 

அரவிந்த ஜோதியுடன் அகமகிழ்ந்த பார்ப்பான்

குயிலின் பாட்டை கேட்டுவானில் சிறகடித்த பார்ப்பான்  – தன்

உயிரில் கவிதை தமிழ் எழுதி உவந்தளித்த பார்ப்பான்

  

தொலைந்துபோன நாட்டுப்பற்றை மீட்டுத்தந்த பார்ப்பான் – இந்த

தேசம் உங்கள் தேசம் என்று கற்றுத் தந்த பார்ப்பான்

அலைந்து திரிந்து  மெலிந்து ஏங்கி வாடி நின்ற போதிலும்

நெஞ்சத்தையே நிமிர்த்தி மிடுக்கு நடை நடந்த பார்ப்பான்

 

நாட்டை உயர்த்த பார்ப்பான் மொழியை வளர்க்க பார்ப்பான்

பேதங்களை நீக்கிடவே கவிதை செய்து பார்ப்பான்

காசுபணம் இல்லாமல் மாய்ந்துவிட்ட போதிலும்

வானம்வரை எட்டுகின்ற தன் புகழைப்  பார்ப்பான்!

Comments
  1. Brilliant Kavidhai.What an outstanding tribute to Mahakavi Bharathiar.