ஸ்ரீ ராமானுஜருக்கு தற்கால சமூக சீர்திருத்தவாதியின் மூலாம்

Posted: April 25, 2015 in Uncategorized

ஜே. பார்த்தசாரதி 

சில நாட்களுக்கு முன் ‘கே கே பிர்லா பாவுண்டேய்ஷன்’ என்ற வடநாட்டு ஸ்தாபனம், சரஸ்வதி சம்மான் என்ற ஐந்து லட்சம் ரூபாய் கொண்ட தன் இலக்கிய பரிசை இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதியுள்ள ‘ராமானுஜர்’ என்ற நூலுக்கு பத்திரிகைகளில் வெளிவந்தது. தமிழ் நாவல், சிறுகதை நாடக நூல்கள் எழுதி பெயர்பெற்ற ஒரு வைணவ ஆசிரியருக்கு ஒரு தமிழ் நூலுக்காக கணிசமான பரிசு வழங்கப்படுவது நமக்கு மகிழ்ச்சிக்குறிய ஒன்றாகும்.

ஆனால் ஆர்வத்துடன் புத்தகத்தை அணுகும்போது, ஏமாற்றங்கள் உண்டாகின்றன. உட்புகுந்து படித்தால் பக்தர்கள் உள்ளம் நோகும்படி ஸ்ரீ ராமானுஜர் சரித்திரம் அமைக்கப்பட்டுள்ளது புலனாகிறது.

இன்றும் பக்தி, சரணாகதி நெறிகளை அனுஷ்டித்து ஸ்ரீ ராமானுஜரை நினைந்து, உள்ளம் உருகி, மெய்சிலிர்த்து பரவசமாகி நிற்கும் அடியார்கள் இல்லாத ஊரே இல்லை. இத்தகையவர்கள் மனம் புண்ணாகும் முறையில், அவர்கள் வழிபடும் தெய்வமான ஸ்ரீவைஷ்ணவ குழப்பெரியாரின் வாழ்க்கைப் பெரும் பணிகளை தம் மனம்போனவாறு திருத்தியும் திரித்தும் சித்தரித்துள்ளது வருந்தத் தக்கதாகும்.

புத்தக ஆசிரியர், ராமானுஜர் நமக்கு சமகாலத்தவர் —அதாவது அவர் கருத்துக்கள் இன்றைய நவீனப் புரட்சியாளர்களுடைய இலட்சியங்களோடு சேர்ந்தவை, 11-12-ஆம் நூற்றாடுகளை மட்டும் அல்ல —, என்று நாம் உணர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, நமது பெரியோர்கள் வழிவழியாக போற்றிவரும் ஸ்ரீராமானுஜர் வரலாற்றை உருக்குலைத்து மாற்றி நமக்கு அளித்துள்ளார்.

ஸ்ரீவைஷ்ணவ பக்தி சரணாகதி நெறிகளை மேற்கொண்டு , அவற்றால் உபாசிக்கப்படும் தனிப்பெரும் தெய்வமான, சகல கல்யாண குணங்களும் நிறைந்து விளங்கும் ஸ்ரீமன் நாராயணனுடைய அடியார்களாகி எல்லோரும் வேறுபாடின்றி உய்யவேண்டும் என்று தமது நீண்ட ஆயுளில் பல்வேறு ஆக்கப்பணிகள் புரிந்தார் ஸ்ரீ ராமானுஜர்.

அச் செய்கைகள் அனைத்தும் பக்தியை பரப்புவதிலும் பக்தி நிறைந்த அடியார் கூட்டத்தை விருத்தி செய்வதிலுமே கழிந்தவை. அவர் இயற்றியுள்ள ஸ்ரீபாஷ்யம் என்ற சம்ச்க்ரிட்ட வியாக்கியான நூலில், பொது சமுதாயத்தில் வருணாஸ்ரம தர்ம கட்டுப்பாடுகள் அவர் காலத்தில் உள்ளபடியே கூறுகிறார். சாதி ஒழிப்பு — பொது சமுதாயத்தில் அதன் ஒழிப்பு — அவர் பணியாற்றிய அடியார்கள் திருக்கூட்டத்திற்கு, பாகவத சமுதாயத்திற்கு, அபபாற்பட்டதால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.. அதைக் கண்டிப்பதற்கு பிரமேயமும் இல்லை.

தாம் தலைமை தாங்கிய அடியார்கள் திருக்கூட்டங்களிலும் தம் சொந்த முறையிலும் ஸ்ரீ ராமானுஜர் பக்தியில் சிறந்தோரை அவர் பிறந்த குளம் எதுவாகினும் தம் போற்றுதலுக்கும் நட்பு பணிவிடைகளுக்கும் உரியவராக கருதிவந்தார்.

ஸ்ரீமந்நாராயணன் மீது பக்தி, அவன் அடிமைத்திறம் இவையே ஸ்ரீ ராமானுஜர் செயல்களுக்கெல்லாம் அடிப்படை. உயிர்கள் எல்லாம் நாரணன் திருவருளாலே உய்யவேண்டும் என்ற ஒன்றே அவர் ஆக்கப்பணிகளின் திறவுகோல். பொது சமுதாய சாதிகள் ஒழிந்திட வேண்டும் என்ற இக்கால சீர்திருத்த வாதியல்ல அவர். நாரணன்பால் உளங்கனிந்து தொண்டுசெய்யும் மறவன் உறங்கா வில்லிதாசனையும் மெய்யன்புடன் திருநாராயணபுரத்தில் திருமால் கைங்கர்யங்களில் ஈடுபட்ட பஞ்சம அடியார்களையும் அவர் அன்பு பாராட்டி போற்றிவந்ததன் அடிப்படை பக்தியே ஆகும்.

இந்த பக்தி அடிப்படையிலேதான் எல்லோரும் உய்ய வேண்டும் என்று அவர் திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து கற்ற ரஹசிய மந்திரார்த்தத்தை ஆசை உள்ளவர்களுக்கு எல்லாம் வெளியிட்டார்.

ஸ்ரீ ராமானுஜருடைய எல்லா பணிகளிலும் நாராயண கைங்கர்யம் மூலம் மக்கள் வீடு பெறும் நோக்கமே விஞ்சி நிற்கும் உண்மை, இந்நாடகத்தில் மாறிவிட்டது. சாதி ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவம், பஞ்சமர்க்கு முதலிடம் அளித்தல், இந்து-முஸ்லிம் சமரசம் போன்ற கருத்துக்களை அவர்மேலேற்றி அவரை இன்றைய முற்போக்கு அரசியல்வாதியின் பிரதிபிம்பம் போல் ஒரு நவீன ராமானுஜரைப் படைத்துள்ளார் நம் நாடகாசிரியர்.

சாதி ஒழிப்பு என்பது இக்காலத்துப் பிரச்சினை. இதை 12-ஆம் நூற்றாண்டில் நுழைத்து, ஆன்ம பக்தி நெறிகளை திசை திருப்புவது தவறு என்பது சொல்லவேண்டியதில்லை. தம் சாதி ஒழிப்பு சீர்திருத்தங்களினால் ராமானுஜர் வைதிக பிராமணர்களை விரோதித்துக்கொண்டதாகவும், அவர்கள் இவர் கோவிலுக்குள் போக அனுமதி மறுத்ததாகவும், இவர் பஞ்சமருக்கு பூணூல் போடுவதாகவும் ஆசிரியர் செய்துள்ள் பல கற்பனைகள், நல்லோர் உள்ளத்தை நலிவிக்கின்றன.

ஸ்ரீ ராமானுஜர் வேதமார்கத்தை பக்தி மார்க்கத்துடன் ஆழமாக இணைத்து, பக்தியினால் வரும் மேன்மைகளை பேசியும் அனுஷ்டித்தும், வைதிக பிராமணர்களிடையே மதிப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தவர். இக்காலத்து தீவிர சாதி ஒழிப்பை அவர் மீது சுமத்துவது சரித்திரத்திற்கும் அவருக்கும் இழைத்த தீங்கே ஆகும். ஸ்ரீரங்கத்தில் அவர் செய்த சீர்திருத்தங்களால் பகைமை பாராட்டிய ஒரு சிலர் அவரை விஷமிட்டுக் கொள்ள முயன்றதாகக் கூறப்பட்டுள்ளதைக்கொண்டு, வைதிக பிராமணர்கள் அனைவருமே அவருக்கு விரோதிகளாக ஆகிவிட்டனர் என்று ஆசிரியர் சித்தரித்துள்ளது மிகைப்படித்திக் கூறுவதே ஆகும்.

நால்வகைச் சாதி ஒழிப்புக் கொள்கையை அழுத்திக் கூறுவதற்காக, அஷ்டாக்க்ஷர சரம ஸ்லோக மந்திரங்களின் பொருள்களும் திரித்து ராமானுஜர் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன…

ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் ஆண்-பெண் சரிசமமாக நடத்தப்பட்டுள்ளனர் என்றுஆசிரியர் அவ்வாசாரியரைப் பேச வைப்பதோடு விந்தையான ஒரு கற்பனை நிகழ்ச்சியையும் படைத்துள்ளார்.

ஸ்ரீபாஷ்ய பேருரை எழுதும்போது ஸ்ரீ ராமானுஜருக்கு ஒரு ஐயம் எழுந்ததாம். ஜீவாத்மாவை இயக்குவது அதன் ‘சித்’ என்ற ஞானத்தன்மையா? அல்லது பரமனுக்கு அடிமைத்தன்மையா (பாரதந்திரியமா)? என்பது அது. திருக்கோஷ்டியூர் நம்பியை நாடி இக்கேள்விக்கு அவர் பெற்ற விடை பாரதந்திரியமே முதலானது, அதுவே ஞானத்தை இயக்குவது என்பது. அதாவது, கடவுள் இயக்கத்தினால்தான் ஜீவாத்மா இயங்கும், இரிவாற்றல் தோன்றும். இதையே ‘அடியேன் உள்ளான், அண்டத்து உள்ளான்’ என்று திருவாய் மொழியில் (8.8) நம்மாழ்வார் பாடியுள்ளார். இந்த வரலாற்றை அறிந்தோ அறியாமலோ, இந்நாடகம் எழுதியவர், ராமானுஜர் தம் சந்தேகத்தை கூரத்தாழ்வான் மனைவி ஆண்டாளம்மா விடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டதாக காட்டியிருப்பது எப்படிப்பட்டு தவறு என்று கூறத்தேவையில்லை. பெண்ணுக்கு மகத்துவம் கற்பிக்கும் முறையின் சிகரமே இது !

மாறநேர் நம்பி வரலாற்றை ஆசிரியர் முழுவதம் மாற்றி அவரை அரிஜன சேரியில் உள்ளோர்க்கு திவ்விய ப்ரபந்தம் கர்ப்பிக்குமாறு ராமானுஜர் சொன்னதாக காட்டியுள்ளதும் இது போன்றதே. அவர் திருக்குலத்தார் என்று அழைத்த பஞ்சமர்க்குக் காட்டிய காட்டிய முதலியவைகளும் ஆசிரியரின் கற்பனை வளத்தைக் காட்டி உண்மைகளை மறைப்பவை.

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ ராமானுஜர் செல்லப்பிள்ளை விக்கிரகத்தைப் பெறுவதற்கு தில்லி சென்று முஸ்லிம் நவாபுக்கு சலாம் செய்வதும் அவருடன் மதசமரசம் பேசுவதும் பக்தர்கள் உள்ளங்களை பெரிதும் வருந்த செய்பவை. துருக்கர்கள் ஸ்ரீ ராமானுஜர் வாழ்ந்த 12-ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே அரசர்களாக இந்தியாவில் இருந்தனர் என்ற சரித்திர உண்மையால், அவர் தில்லி சென்றது ஒரு பொய்யான நாட்டுக்கதையாகவே கொள்ளவேண்டியதாகும்.

நித்தியம் அச்சுத பதத்தாமரைகளின் இடையறாத மோகத்தை தவிர எனையவற்றைஎல்லாம் த்ரினமாக நினைத்து விலக்கிய, கருணைக்கடலான நம் குருவாகிய ராமானுஜரின் சரணங்களை வழிபட்டுச் சேர்வோம் என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினம்தோறும் ஆராதிக்கும் பிரபன்னகுலத் தலைவர் ஒரு நவாபுக்கு சலாம் செய்தார் என்பது பக்தர் உள்ளத்தை எவ்வளவு துன்புறுத்தும்?

இப்புத்தகத்தின் எழுத்துக் குறைபாடுகளையும் பிற முரண்பாடுகளையும் ராமானுஜரின் உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கூறுகளையும், மேலும் கூறுதலை விரிவஞ்சி இத்துடன் நிறுத்தி கொள்ளலாம். இத்தகைய நாடகத்தை தற்கால பிரச்சார சாதனங்கள் வாயிலாக மக்களிடையே பரப்புவதும் அது பரிசுட்பெற்றது என்பதனால் பரமான தன்மை உடையது என்ற எண்ணமும் பரவாமல் காப்பது அவசியமாகும்.
ஸ்ரீ ராமானுஜரின் சரிதத்தை பக்தி நெறியை வளர்க்கும் உருக்கமான முறையில் கன்னையா கம்பெனி என்ற நாடக கம்பனியார் 1920-30 காலகட்டத்தில் நடத்தி வந்ததும், மக்கள் அதைக்கண்டு பக்திச் சுவை சொட்டச்சொட்ட மகிழ்ச்சி உற்றதும் இன்றைய முதிய தலைமுறையினருக்கு நினைவில் இருக்கலாம். அண்மையிலும் இவ்வகை நாடக நிகழ்சிகள் நிகழ்ந்துள்ளன. இவையே திருமால் நெறியின் பக்தி பிரதானமான சமதர்ம மார்க்கத்தை பரப்பும் சிறந்த சாதனங்கள் ஆவன.

இன்றைய சாதி ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவக் கொள்கைகளுக்கு இன்றைய சூழ்நிலையிலேயே வலுவான காரணங்களை ஆதாரமாக கொள்ளலாம். 12-ஆம் நூற்றாண்டின் பழைய ஸ்ரீ ராமானுஜரைக் கீழ்மைப் படுத்தி, இன்று நமக்கு வேண்டிய சாயத்தை அவர்மேல் பூசுவது, அவருக்கு பெரும் தீங்கு இழைப்பதே ஆகும்.

Advertisements
Comments
  1. Hariharan says:

    Superb