இசை மன்னன் அழைக்கின்றான்

Posted: July 14, 2015 in Tamil cinema, Tamil film music
Tags: , ,

கதை முடிந்து போச்சென்று

கடற்கரையில் கிடக்கின்றான்

அலை எழுந்து தடுமாறி, அவன்

அருகில் வந்தழுகிறது – மக்கள்

அலை எழுந்து தடுமாறி, அவன்

அருகில் வந்தழுகிறது

 

பாலக்காட்டிலிருந்து- ஒரு

பாட்டு மன்னன் வந்தான்

ஏலக்காடாம் திரை உலகில்

இசை வெளிச்சம் தந்தான்

பாசத்தை மலரவைத்தான்

நேசத்தை குளிரவைத்தான்

பாசமும் நேசமும் இன்று

பரிதவித்து கிடக்கின்றன

 

தமிழதனை தேன் என்று

கவிஞர்கள் சொல்வார்கள் – அந்த

தமிழுக்கு தேன் தந்து – புது

முறை செய்துவைத்தான்

கருப்பு வெள்ளை கட்டைகளில்

நிறம் ஆயிரம் கண்டானே — இன்று

விருப்பின்றி மூலையிலே

கிடக்கிறது ஆர்மோனியம்

 

சொல்லோடு விளையாடும்

சுகம் ஒடிப்போச்சு – இன்று

சுருதியோடு லயம் யாவும்

ஏக்கமுறல் ஆச்சு

 

தவம் செய்து பெற்றுத்தந்தான்

இசைசெல்வங்களை எல்லாம் – இன்று

கண்மூடி, நம்மையும்

தவம் செய்ய சொல்கின்றான்

 

இசைமீண்டும் வாழ

தவம் செய்ய வேண்டும்

திசையெங்கும் விரிகின்ற

உயர் எண்ணம் வேண்டும்

எண்ணங்களின் உயர்வுகள் – இசை

வண்ணங்களில் தோய்ந்தால்

உயிர்கள் இன்பமுறும்

உயிர்கள் இன்பமுற்றால்

உலகமே சொர்க்கமாகும்

Comments are closed.